ஆசையே மனிதனின் அழிவிற்கு காரணம் என்று பள்ளிப்பருவத்தில் படிக்கும் பொழுது எப்பொழுதோ காதால் கேட்ட ஞாபகம் உண்டு. ஆனால் இன்னாளில் ஒரு மகான் " எல்லாவற்றிற்கும் ஆசைப்படு " என்று சொன்னதாக ஒரு வாரப் பத்திரிக்கையில் படித்து விட்டு எனது நண்பன் ஒருவன் இன்ன விஷயம் என்றில்லாமல் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட ஆரம்பித்தான்.
சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அவன் வெளி நாட்டு காருக்கு ஆசைப்பட்டு தெருவில் நின்று கொண்டிருந்த காரை தடவிப் பார்க்க அது அலறி காருக்கு உரிமையாளரையும் கூடவே போலீஸையும் அழைத்தது. அங்கிருந்து நகன்று ஆபீஸை நோக்கி போகும் பொழுது தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த அழகான் பெண்களை பார்த்து இவள் போல எனக்கு மனைவி அமைந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டே போய் சைக்கிளை எதிரில் வந்து கொண்டிருந்த ஆட்டோவில் மோதி அடி வாங்கி இருக்கிறான்.
மதிய உணவு இடைவேளையில் எல்லோரும் அவரவர் டிபனை திறக்க இவன் மட்டும் மானேஜரைப் போல ஓட்டலில் இருந்து வாங்கி சாப்பிட ஆசைப்பட்டு தனது ஒரு வார சம்பளத்தை ஒரு வேளை உணவாக்கி நொந்து போய் வீட்டிற்கு வந்தால் வாடகை பாக்கியை வசூல் செய்ய வீட்டுக்காரர் வந்து நின்றிருந்தார். மறு நாள் சொந்த வீடு வேண்டி வங்கியில் லோனுக்கு அலைந்து திரிந்ததில் லோன் கிடைக்கவில்லை. கையிருப்பு தான் காணாமல் போயிருந்தது.
தனது நிலைமையை எண்ணி நொந்து என்னிடம் வந்து குமுறலை கொட்டித் தீர்த்தான். நானும் அவனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசமும் செய்தேன். அந்த மகான் எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்று சொன்னாரே தவிர எந்தமனிதன் , எதற்கெல்லாம் , எவ்வாறு , எவ்வளவு தூரம் ஆசைப்படலாம் என்று சொன்னதை நீ கவனிக்கத் தவறியது உன் குற்றம் தான். இனி மேலாவது பார்த்து நடந்து கொள் என்று அவனுக்கு உபதேசம் சொல்லி அவனை தேற்றி அனுப்பி வைத்தேன்.
சிறிது நேர சிந்தனைக்குப் பின் இதே போல நாம் நிறையப் பேருக்கு அன்பாகவும் , அழகாகவும் உபதேசம் செய்தால் போதுமே நாமும் ஒரு மகான் ஆகி விடலாம். நமக்கு பின்னாலும் ஒரு கூட்டம் வரும். மாலை , மரியாதை , அரசியல்வாதிகளின் நட்பு , பணக்காரர்களின் டொனேஷன் என சகலவிதமான வசதிகளும் வந்து சேருமே என்று நினைத்து புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தேன்.
சீச்சீ........ நானும் " எல்லாவற்றிற்கும் ஆசைப்படுகிறேனோ "?
Wednesday, December 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment